Breaking News

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை..

 


கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த சுமார் 280 ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு நியமன விதிகளுக்கு புறம்பாக ஒப்பந்த ஆசிரியர்களாக பணியில் அமர்த்தினர். பொதுவாக ஆசிரியர் பணி என்பது அரசு பணியாகும். அரசு பணி நியமனத்தில் ஒப்பந்த பணி என்பது சட்டவிரோதமானதாகும். ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் சிடிஇடி தேர்ச்சி பெற்றவர்கள். ஆசிரியர் பணியிட தேர்வின் போது நடைபெற்ற தேர்வில் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த ஆசிரியர்களாக பணியில் அமர்த்தப்பட்டனர்.

ஆசிரியர் பணியிடம் நிரப்புவதில் அனைத்து தகுதிகளும் உடைய ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர் பணியாக அரசு நியமனம் செய்திருக்கலாம். பணி நியமன சட்ட விதிகளுக்கு புறம்பாக அப்போதைய திமுக காங்கிரஸ் அரசு ஒப்பந்த ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ததின் விளைவு இன்று ஆசிரியர் பெருமக்கள் பணி நிரந்திரத்திற்காக வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் கெஸ்ட் விரிவுரையாளர்கள், கெஸ்ட் பட்டதாரி ஆசிரியர்கள், கெஸ்ட் பாலசேவிக்காக்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசிடம் ஆண்டுதோறும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்பிரச்சனையில் ஏற்கனவே கொடுக்கல், வாங்கல், கையூட்டு பெறுதல் உள்ளிட்ட பல்வேற குற்றச்சாட்டுகள் எழுந்ததின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவதில் தடை ஏற்பட்டது.

தற்போது ஒப்பந்த ஆசிரியர் பணியில் உள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என சட்டமன்றத்தில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பை ஏற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், கல்வி அமைச்சர் அவர்களுக்கும் ஒப்பந்த ஆசிரியர்கள் மலர் தூவி தங்களது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். ஆனால் தற்போது ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதில் பல்வேறு தடங்கல்களை உயரதிகாரிகள் செய்து வருவதாக தெரிகிறது. இதனால் ஒப்பந்த ஆசிரியர் மனதில் தாங்கள் அரசால் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்கின்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக இரவு, பகல் பாராமல் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வீதியில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கின்றனர். அனைத்து தகுதிகள் இருந்தும் தங்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி புரியும் ஆசிரியர்கள் தாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற எண்ணத்தில் பணி செய்து வந்தனர். தற்போது அரசின் நடவடிக்கை அவர்களின் எண்ணத்திற்கு நேர்மாறாக இருந்து வருவதாக தெரிகிறது. மேலும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களையும் ஒருசிலருக்கு மட்டும் புதுப்பித்துவிட்டு மற்றவர்களை அரசு நட்டாற்றில் விட்டதாக தெரிகிறது.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நியமன விதியின் படி தேர்வு செய்ய அரசு முடிவெடுத்தால் ஏற்கனவே பணியில் உள்ள வயதுகடந்த ஒப்பந்த ஆசிரியர்கள் அந்த தேர்வில் கூட கலந்துகொள்ள முடியாத ஒரு அபாயகரமான சூழ்நிலை ஏற்படும். இதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையை அமுல்படுத்துவதில் ஏற்கனவே அரசு பல்வேறு குளறுபடிகளை சந்தித்து வருகிறது. தற்போது அரசு பள்ளி ஒப்பந்த ஆசிரியர்கள் பிரச்சனைகளில் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசு பள்ளிகளின் தரம் குறைக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு சாதகமான ஒரு நிலைபாட்டை அரசு எடுப்பதாக தெரிகிறது.

எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கல்வி அமைச்சரோடு துணைநிலை ஆளுநரை சந்தித்து இதில் உள்ள உண்மை நிலையை துணைநிலை ஆளுநரிடம் நன்கு புரியும்படி விளக்கம் அளித்து ஒப்பந்த ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்யும் அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments

Copying is disabled on this page!